Smt.MS. 1968- MUSIC ACADEMY- -presidential address and thanks-giving speech





தலைமை உரை
================
https://issuu.com/themusicacademy/docs/1969/16
மேன்மை தங்கிய மஹாராணி அவர்களே, வித்வத் சபைத் தலைவர் அவர்களே, சங்கீத் மஹநீயர்களே ,தாய்மார்களே, பெரியோர்களே,
ரஸிகப்பெருமக்களே !
--
 ஸங்கீத வித்யார்த்திகளின் பிரதிநிதியாக என்னைக் கருதி ,இந்த மகத்தான தலைமைப் பொறுப்பை ,சங்கீத வித்வத்  சபையினர் எனக்கு   அளித்திருப்பதாகவே கொள்கிறேன். சங்கீத வித்யாப்யாஸத்தைத் தொடர்ந்து நான்  மேற்கொள்ளுவதற்கு  ஊக்கமளிக்கவே ,  இந்த பெரும்  கௌரவத்தை எனக்கு  வழங்கியிருப்பதாகக் கருதுகிறேன்.  மேலும் பெண் குலத்தை
பெருமைப் படுத்துவதற்காக  என்னை அதன் பிரதிநிதியாகக் கருதி  இந்த  மாநாட்டுக்கு தலைமை வகிக்கும் பாக்கியத்தை எனக்குத் தந்திருப்பதாகவும்  எண்ணுகிறேன்.எனது சக வித்யார்த்திகளின்   சார்பிலும் ,பெண் குலத்தின் சார்பிலும் ,எனது  இதய  பூர்வமான நன்றியை வித்வத்  சபையினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    சங்கீத  சாகரத்தில் மூழ்கித்  திளைத்த வித்துவான்கள்  பலர் இருக்க அந்த ஸாகரத்தின் கரையோரமாக சிறிதே  நனைந்து நிற்கும் நான், ஆண்டவன் சித்தம்  இது எனக் கருதி , அவனது அருளையும் பெரியோர்களின் ஆசியையும் துணைக்கொண்டு , இப்பொறுப்பை  ஏற்கின்றேன் .
    இந்த விழாவை மாட்சிமை தங்கிய திருவிதாங்கூர் மகாராணியார் தொடங்கி வைப்பது எனக்குப் பெரும்  பலமாக உள்ளது. மேன்மை தங்கிய மஹாராணி  அவர்கள்,  நமது சங்கீதத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள். திருவிதாங்கூர்  ராஜ்யத்தில் ஏற்பட்ட  இசை மறுமலர்ச்சிக்கு  அவரே முக்கியமான காரணகர்த்தா,  தானே  வீணா காணத்தில்   தேர்ச்சி பெற்றவர். அவர்கள் முன் பாடுவதே  ஒரு  பாக்கியம்.  என்று வித்வான்கள் கருதக்கூடிய பரம ரசிகர்.
மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஒரு பெண்ணிடம் கொடுத்ததோடு, மாநாட்டைத் தொடங்கி வைக்கவும் இப்பெண்ணரசியாரைத் தேர்வு செய்தது எனக்குத்  தனியானதொரு தென்பு  ஊட்டியுள்ளது.
    ஸங்கீத  வித்வத் ஸபை ,நமது இசைக்கு செய்துவரும் ஈடு இணையற்ற சேவையை  விளக்கவே தேவை இல்லை. சாஸ்திரிய சங்கீத வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஸ்தாபனங்களில் ,நமது  வித்வத் சபையே  அகில பாரதத்திலும் முதன்மைக் கௌரவம் பெற்றுள்ளது. இசை நிகழ்ச்சிகள் நடத்துவதாலும் ,இசை ஆராய்ச்சிகள் செய்வதாலும், இசை நூல்கள் வெளியிடுவதாலும் கர்நாடக சங்கீதம் செழித்து  வளர்வதற்கு பேருதவி  புரிந்து வரும்  நிறுவனம்  இது.
   ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், உலகத்தில் இதர நாடுகளிலும்  கூட,கர்நாடக சங்கீதத்தில் ஓரளவு  ஈடுபாடு  ஏற்பட்டுள்ளது  எனில், வித்வத் சபைக்கு இதில் முக்கியமான பங்கு உண்டு.
   நமது வித்வத் சபை, அயல்நாட்டு இசை அறிஞர்களை தனது மாநாட்டுக்கு  அழைத்து ,ஆராய்ச்சி மூலமும் அனுபவம் மூலமும் நம்முடைய கர்நாடக சங்கீத   பெருமைகளை அவர்களுக்கு உணர்த்தி ,அந்த அறிஞர்களின் வழியே அவர்களது நாடுகளிலும் ,நம் இசையின்பால் ஈடுபாடு  உண்டாக்கியுள்ளது.
கர்நாடக சங்கீத சாம்ராஜ்யத்தின்  எல்லை, சர்வ தேசங்களுக்கும் பரவிவரும் இந்தப் பொற்காலத்தில், சங்கீத வித்வத்  சபையையும், வித்வத் சபைக்கு வித்தூன்றிய  டாக்டர் உ.ராமராவ் ,அவர்களையும் ஸ்ரீ கே.வி.கிருஷ்ணஸ்வாமி அய்யர் அவர்களையும் ,நன்றியுடன் நினைக்க வேண்டும்.

    இந்த மகத்தான மண்டப  நிர்மாணம் வித்வத் சபையின் வாழ்வில் ஒரு முக்கியமான  .மைல்கல் . நம் இசையின் பெருமைக்கு  உகந்த பெரிய மன்றம் உருவாகிவிட்டது.  எனினும் இக்கட்டிடத்திற்காக ஏராளமான பொருட்ச்செலவை ஏற்க நேர்ந்ததால், தற்போது  வித்வத் சபை  ,நிதி நிலையில் ஓரளவு  சிரம தசையிலேயே உள்ளது.  ஈஸ்வர   அனுகிரஹத்தில்,இன்னும் ஓராண்டு காலத்திற்குள்ளேயே  ,இந்த சிரமம் வெகுவாகக் குறைந்துவிடும் என்று  நம்புகிறேன்.
  அதன் பிறகு, வித்வத் சபையின்  சங்கீத  சேவை ,இத்தனை  ஆண்டுகளாக  இருந்ததைவிட , சக்தியும் வேகமும்  பெறமுடியும்.---பெற வேண்டும்- --பெறும்  என்றே  சொல்லலாம்.  ஸ்தாபனத்தின்  சிரமத்தைத் தீர்ப்பதற்காக  தற்போது செலவிடப்படும் சக்தியும் , பொருளும் , சிரமம் தீர்ந்த பிறகு, இன்னும்  தீவிரமாக சங்கீத வளர்ச்சி காண்பதற்கே  பயனுறும்.

 சங்கீத வளர்ச்சியில் ,வித்வத் சபை முக்யமாகக் கவனம் செலுத்தவேண்டிய அம்சம், இளம் விதவான்களை  முன்னணிக்கு கொண்டு வருவதே என்று நான் கருதுகிறேன்.  எதிர்காலத்தில், வித்வத் உலகில் ஏற்படக்கூடிய சூன்யத்தைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாக  இருந்து, அத்தகைய உத்பாதம் நிகழாமல் முன்கூட்டியே  போதிய  நடவடிக்கை  எடுப்பது  அவசியம்.  வித்வான்களைத் தோற்றுவிக்கும்  நாற்றங்காலாக ,இந்த வித்வத்  சபை  வருங்காலத்தில் திகழும் என்று  நம்புகிறேன். அந்தப் பணிக்கே ,இது  தன்னை முக்கியமாக அர்ப்பணித்துக்கொள்ளும் என்றும்   எதிர்பார்க்கிறேன்.

   வித்வத் சபையின் மாநாட்டுத்  தலைமை  வாய்த்திருக்கும்  இந்த நேரத்தில், எந்த ஒரு  பெண்ணுக்கும்  தன  தாயின் நினைவு  நெஞ்சில் நிறைவது  இயற்கை.  இயல்பான ஆத்மார்த்தமான இந்தத் தாய்-நினைவோடு , என் விஷயத்தில் ஒரு காரணார்த்தமான நினைவும் சேர்கிறது.   என் தாய்  எனக்கு  தாய் மட்டுமல்ல.  குருவும்  அவரே.  எனக்கு  சங்கீதத்தில்   ஏதோ சிறிது  தெரிகின்றதென்றால், இந்த  சொற்ப  ஞானத்துக்கு  முதல் காரணம்  என் அன்னையே.  எனவே  தாய்  என்று காரணமற்ற அன்பையும், குரு  என்ற காரணம்  பற்றிய வித்யையும்  நினைந்து , காலஞ்சென்ற எனது  அருமை  அன்னை  வீணை விதுஷி   மதுரை சண்முகவடிவு அம்மையாரை  வணங்கி  அவரது ஆத்ம  சக்தியைத் துணை கோருகிறேன்.

  அடுத்த படியாக ,காலஞ்சென்ற வித்துவான் மதுரை ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களுக்கு  நினைவஞ்சலி செலுத்துகிறேன்.  தேங்காய் உடைத்து எனக்கு சங்கீத  சிக்ஷை என்ற  ஒன்றை முறைப்படி தொடங்கிவைத்து வர்ணம் வரையில் கற்பித்தவர் வித்துவான் ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர்களே.அதன் பின் முறையாக குருகுலவாசம் என்று  செய்ய இயலாமல் ,வீட்டிலேயே  அன்னையிடம் பாடம்  கேட்டேன். இந்தக் குறையை நீங்கச் செய்வதேபோல்
பிற்காலத்தில் அவ்வப்போது பல மஹா விதவான் களிடம் கற்றுக்கொள்ளும் பேறு எனக்கு  கிடைத்திருக்கிறது. இவர்களில், முக்கியமாக பிரம்மஸ்ரீ முசிறி அய்யர் அவர்களையும்,  பிரம்மஸ்ரீ  செம்மங்குடி அவர்களையும்  குரு ஸ்தானத்திலேயே  வைத்து நமஸ்கரிக்கின்றேன்.  இன்றளவும் இவ்விரு  மஹா வித்வான்கள்  எனக்கு அருளுடன் போதனை அளித்து வருவதை பெருமையுடன் வெளியிட்டுக்கொள்கிறேன்.

   பல  இசைப்பெரியார்களின் ஆசிகள் ஒரு காப்புச் சக்தியாக என்னை  வாழ்வித்திருக்கின்றன. இவர்களில், இசைப் பெருமாட்டி ஸ்ரீமதி வீணை தனம்மாள் அவர்களின் ஆசி எனக்கு கிட்டியதை இன்று பூரிப்புடன் நினைவு கூர்கிறேன். நான் சிறுமியாக இருந்தபோது என் தாயார் என்னை அழைத்துக்கொண்டு ,எழும்பூரில் இருந்த ஸ்ரீமதி தனம்மாள் இல்லத்துக்கு சென்றிருந்தார்.    என்னை பாடச்சொல்லிக் கேட்ட அந்த   நாத வித்தகி  "நன்னா முன்னுக்கு வருவாள்  "  என்று  ஆசி  கூறியது இன்றும் என் காதில் ஒலிக்கிறது.

      என்  நிறைந்த நன்றிக்கும் நமஸ்காரத்துக்கும் உரியவர்களில் இன்று முக்கியமாக இருப்பவர் என் கணவர் அவர்கள்.   நான் அவருக்கு  எவ்வளவு கடமைப் பட்டிருக்கிறேன் என்பதை எத்தனை  சபைகளில் மனம் விட்டு ,வாய் விட்டு சொன்னாலும் எனக்குத் திருப்தி  ஏற்படாது. தமது தனி வாழ்வு என்றும், தனிப் பெருமை என்றும் எண்ணாமல் ,தமக்காக இம்மியும் செய்துகொள்ளாமல், என்னை வாழ்விப்பதற்கும், எனக்குப் பெருமை ஏற்படுவதற்குமே ,  அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர்  அவர்.   நான் சங்கீதத்திலும், சமூகத்திலும் சிறப்பு  எய்தவேண்டும்  என்பதொன்றையே  தமது வாழ்வின் லட்சியமாகக்கொண்டு ,என் இசையையும், வாழ்வையும் பார்த்துப் பார்த்து  உருவாக்கியவர்  என் கணவர்.  இன்று எனக்கு கிடைத்துள்ள புகழுக்கெல்லாம் உரியவர்  அவரே.   எனவே, இதுவரை எனக்கு கிடைத்துள்ள சிறப்புகளையும்  இப்போது பெருஞ்சிறப்பாகக் கிடைத்துள்ள இந்த தலைமைப் பதவியையும் அவரது  பாதங்களிலேயே  சமர்ப்பணம் செய்து வணங்குகிறேன். இந்தப் பொறுப்பை ஏற்க நான் அஞ்சிய போதிலும், தாய்-தந்தையாக என்னை வளர்த்து  ஆளாக்கி , குருவாக எனக்குப் போதித்து ,நண்பராக எனக்கு  உற்சாகமூட்டி ,தெய்வமாக என்னை வாழ்வித்துவரும் என் கணவரைப்பற்றி நான் உள்ளம் திறந்து பேச , இதனால் ஒரு  சந்தர்ப்பம் வாய்த்ததே  என்று  மகிழ்கிறேன்.
     
      இசைக் கலைஞர்கள் அனைவரும் மீளாத நன்றிக்கடன் பட்டுள்ள நாதோபாசகர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்.  இந்த நாதோபாசகர்களின் பரம்பரையைப் போல புனிதமான, மகத்தான ஒன்று உலகில் வேறெங்குமே கிடைக்காது.  சிவ பெருமானும், ஸ்ரீமந்   நாராயணனும்
பிரம்மனுமே  நாதோபாஸனை  செய்தனர் என்கிறார் சதகுரு  த்யாகராஜ ஸ்வாமிகள்.   கமலை,கௌரி, வாகீஸ்வரி , குஹன்  கஜமுகன் ஆகிய எல்லா தெய்வங்களையுமே சங்கீத  கோவிதர்களாகப்  போற்றுகிறார்.   ,நாரதர்   , தும்புரு , அகஸ்தியர்  போன்ற  முனிவர்களையும்  ஆட்கொண்ட நம் சங்கீததுக்கு சாஸ்திரம் வகுத்தவரும், பரதர் என்ற மாமுனிவரே .   நமது சங்கீதம் லௌகிக  பொழுதுபோக்காக ஏற்பட்டதல்ல என்பதற்கு இந்த  நாதோபாசக ப் பரம்பரையைப் பார்த்தாலே போதும்.  மோக்ஷ சாதனமாகப் பின்பற்றப்பட்ட நமது சங்கீத கலையின்  உபாசகர்கள் அனைவரையும் வணங்கும்போது , குறிப்பாக  சங்கீத த்ரிமூர்த்திகள், நம் நினைவுக் கோயிலின் மூலஸ்தானத்திலேயே  குடி கொள்கின்றனர்.

     அனுபவ  கலையாகிய சங்கீதத்தை சாஸ்திரத்தால் மட்டும்  விளக்க முடியாது.  ஆயினும்  எந்தெந்தக் காலத்துக்கும் இந்த மகத்தான அனுபவம் விளங்க  ஸ்தூலமான மூர்த்திகள்  வேண்டும்.  அப்படிப்பட்ட மூர்த்திகள் நமது   சாஹித்யங்களே.  சாஹித்யங்கள் மூலம், நமது  சங்கீதத்திற்கு தெளிவான ரூபம் தந்து  வரைமுறை செய்த  வாக்கேயகாரர்களில் சிரோமணியாக ஒளிர்பவர்கள்  த்ரிமூர்த்தியரான சதகுரு தியாகராஜ ஸ்வாமிகளும், முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவர்களும்,  சியாமா சாஸ்திரிகள் அவர்களுமே /  ஒரே ஸ்தலத்தில்  தோன்றி , ஒரே காலத்தில் வாழ்ந்து உலகமறியா   அற்புதம் விளைவித்த இந்த சங்கீத மும்மூர்த்தியரை  நினைவுக்கோவிலில்  நிறுத்துவோமாக.   அவர்களோடு சேர்த்து அவர்களது  காலத்திலேயே வாழ்ந்த
ஸ்ரீ ஸ்வாதித் திருநாள் மஹாராஜா  அவர்களையும் ,ஸ்ரீ  கோபால க்ருஷ்ண பாரதியாரையும்  வணங்குகிறேன்.  மற்றும்,கர்நாடக சங்கீதத்தின் பிதாமஹரான  ஸ்ரீ புரந்தரதாசர்,  ஸ்ரீ  க்ஷேத்ரக் ஞர் , ஸ்ரீ  அருணாசல கவிராயர் ,
 ஸ்ரீ முத்துத்தாண்டவர்,  ஸ்ரீ  சதாசிவ பிரம்மேந்திரர்ள்  , ஸ்ரீ  மகா வைத்தியநாத அய்யர் அவர்கள், ஸ்ரீ பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர்கள், ஸ்ரீ பட்டணம் சுப்பிரமணிய அய்யர் , ஸ்ரீ  முத்தையா பாகவதர் , ஸ்ரீ   மைசூர் வாசுதேவாச்சாரியார் ஆகியோருக்கும் இன்றும் நம்மிடையே உன்னத வாக் ஜெய காரர்களாகத் திகழும் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன், அவர்களுக்கும் மேன்மை தங்கிய மைசூர் மஹாராஜா  ஜயசாம ராஜேந்திர உடையார் அவர்களுக்கும் என் வந்தனங்களை அளிக்கின்றேன்.  ராமகிருஷ்ண பரமஹம்சரின் மாண்பு ,சுவாமி  விவேகானந்தரால் உலகத்தில் பிரகாசமானது போல்  த்ரிமூர்த்தியரின் இசைப்பெருமையைப் பிரகடனப்படுத்தும், 'சங்கீத சம்பிரதாய பிரதர்ஸினி ' யைத் தந்த  ஸ்ரீ சுப்பராம தீக்ஷிதரை முக்கியமாக நினைவு கொண்டு பணிகிறேன். .   சங்கீத சம்பிரதாய பிரதர்சினியை . தமிழ் லிபியில் ,  மத்திய சங்கீத நாடக அகாடமியின்  உதவியுடன் நம் வித்வத் சபை
வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது.  ஸ்ரீ  சுப்பாராம தீக்ஷிதருக்கு நமது வித்வத் சபையில், ஒரு நினைவுச் சின்னம் வைப்பதும்  மிகவும் அவசியம்
என்று  எண்ணுகிறேன்.

     மேற்கூறிய மஹாத்மாக்களின் பாடல்களையும்,  இவற்றோடு நம் இசையில் வழங்கி வரும், தேவார, திருவாசக , திவ்யப் பிரபந்தங்களையும், திருப்புகழையும் ,பட்டினத்தார், தாயமானவ  ஸ்வாமிகள், ராமலிங்க ஸ்வாமிகள், ஆகியோரது  பாடல்களையும் ,  ஜயதேவர் அஷ்டபதிகளையும்
பார்த்தால், ஓர் உண்மை தெளிவாகப் புலனாகும்,   பாடல்கள் ராகஸ்வரூபத்தை விளக்குவது மட்டுமின்றி, ஈஸ்வர ஸ்வரூபத்தையும்  விளக்கவே  ஏற்பட்டவை  என்பதுதான் அந்த உண்மை.  அவற்றை பக்தி  பெருக்குடனேயே இசைக்க வேண்டும்.  இயல்பான ஈஸ்வர பக்தியுடன் ,இசையிலும் பக்தி வைத்து ராக ஆலாபனைக்கு முக்யத்வம் தந்து , ராகஸ்வரூபங்களை தேடித் தேடி அடைய வேண்டும் எனவும், சாஹித்யங்களின் பயனான பக்தி புலப்படுமாறு அவற்றை இசைத்து
 நிரவலுக்கு ப்ராதான்யம் தரவேண்டும் என்று  வித்யார்த்திகளைக்
 கேட்டுக்  கொள்கிறேன்.

      பக்தி என்பது நம் உள்ளேயே இருக்கிற உண்மைப் பொருளிடம்   வைக்கிற அன்பு.  இந்த உட்பொருளிடம்  அன்பு வைத்துவிட்டால் ,தானே வெளியில் உள்ள சகலத்திலும் அன்பு உண்டாகிவிடும்.  ஏனெனில் அந்த சகலத்திற்கும் உட்பொருளாக உள்ளது  ஒன்றுதான்.  இந்நிலையில்  பக்தன் உலகனைத்துக்கும் சேவை செய்யும்   அடிமையாகிறான்.  இதைத்தான்
'சகல லோகுலகு     ப்ருத்யுடை'  என்கிறார்  சதகுரு  தனது  'ஸு கி எவ ரோ ' என்ற க்ருதியில்   .   நிரந்தர ஆனந்தம் எய்துவதற்கு  அவர் கூறும் வழிதான் எவ்வளவு   அழகாக இருக்கிறது!
                                  ஸத்யமு  தப்பக ஸகல லோகுலகு 
                                   ப்ருத்யுடை தைவ பேதமு லேக
                                   நித்யமைன ஸு ஸ்வரபு கானமுதே 

          சத்யத்திலிருந்து பிழறாமல்,    உலகம் அனைத்துக்கும் தாசனாகி  , தெய்வங்களிடையே உயர்வு-தாழ்வு பாராட்டாமல் ,அழிவில்லாத  சுஸ்வரத்துடன் இசைப்பவனே ,பகவந் நாம சுவை அறிந்த நித்தியானந்தன் என்கிறார்.   ஸு ஸ்வரத்துடன் , ஸத்யம் ,சேவை, ஸமபாவம் எல்லாம் கலக்க வேண்டும் என்று   இதிலிருந்து  'தெரிகிறது.    'உள்ளத்தில் ஒளி உண்டாகில் , வாக்கினிலே ஒளி உண்டாம் 'என்றார் மஹாகவி பாரதியார்.  உள்ளம் தெள்ளத்  தெளிய இருந்தால்தான் ஸுஸ்வரம் உண்டாகும். 'சுத்தமைன மனஸு சே சுஸ்வரமுதோ ' என்பதாக ஐயரவர்கள் 'கத்தனுவாரிகி ' க்ரிதியில்  கூறுகிறார். சுத்தமான மனஸும்  ஸுஸ்வரமும்  ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கவொண்ணாதவை.
------
13-8-2019
 சுஸ்வரத்திற்கு   நமது வித்யார்த்திகள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என்பது என்  ஆசை..  இதற்கு சாரீரத்தை  நன்கு  அப்பியாசம் செய்து  பண்படுத்திக்கொள்ளவேண்டும்   சாரீரத்தில் இனிமை   மட்டும் இருந்தால் போதாது.   நிலத்தை  உழுது பண்படுத்துவதுபோல குரலையும் பயிற்சியால் பண்படுத்தவேண்டும்.  பொய்க்குரலுக்குப் பாயாமல் வாய்விட்டு த்ரிஸ்தாயியிலும் பாடிப் பாடி பழக வேண்டும்.  ஸ்வர ஞானம் வெகு வெகு அவசியம்.   ஸ்வரஸ்தானங்களை  சங்கேதங்களிலோ ,எழுத்துக்களிலோ வடித்துப் பயில  முடியாது. அப்படிப் பயின்றால்   அது சாஸ்திரமாக இருக்குமே   தவிர ,. கலையாக இராது. நம்முடைய  ராகங்களில் ,எந்த ஸ்வரம்  எப்படி வரவேண்டும் என்பதை துல்யமாக  வீணையை அப்யசித்து , நிர்ணயம் செய்ய வேண்டும்.   கர்பகிருஹத்தில்  அடங்கி அமைதியுடன் ஒலிக்கும் வீணையும் ,விஸ்தாரமான பிரகாரங்களில்  கம்பீரமாக  ஓங்கி முழங்கும்   நாதஸ்வரமும்
கர்நாடக சங்கீதத்தில்  இரு பெரும் செல்வங்கள்.  கமக  நுணுக்கங்களும் ,ஸ்வரஸ்தான தெளிவுக்கும்  வீணை  வழியை வித்யார்த்திகள் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.  நித்திரையைப் புறக்கணித்து ,நல்லதம்புராவை  சுருதி கூட்டி ,அயராமல் சாதகம் செய்ய வேண்டும்  என்பது   ஸ்ரீ தியாக பிரம்மத்தின்  ஆணை. இப்படி  எல்லாம்  செய்தால், இன்று  ஹிந்துஸ்தானி வித்வான்கள்  குரல் பண்பாட்டுக்காக (                      ) பெற்றுள்ள க்யாதியை  நாமும்  நிச்சயம்  பெறலாம்.


  இந்த  சாதகத்துக்கெல்லாம்  மூலம், பக்தியுடன் கூடிய நல்ல மனம்.  நாத வித்யயைத் தொட  நினைப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். நல்லவர்களாவது கடினமாக இருக்கலாம். ஆயினும் இதில் ஒரு  மகத்தான  அனுகூலம் உள்ளது. இந்த முயற்சி காலம் கடந்து போவதே  கிடையாது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின், படித்துப் பட்டம் பெற்று  டாக்டராகவோ, இன்ஜினியராகவோ, வக்கீலாகவோ, ஆவது  முடியாது. ஆனால் எத்தனை  வயதுக்குப்பின்னும் ஒருவர் நல்லவராக முடியும்.  நல்லவர்   மனதில் பக்தி தானாகவே   ஊறும்.    அங்குதான் ஆண்டவனும் வந்து கோயில் கொள்கிறான்.

    கோவிலில்  பூஜை  செய்யும்  அர்ச்சகர்  ,உண்மையான பக்தியோடு  செய்தால் விசேஷம்.   அவர் பக்தியில்லாமல் பூஜை  செய்தாலும், ஆலயத்துக்கு  வருகின்றவர்கள் ஆண்டவனை  பக்தியுடன்  வணங்கி  போவார்கள்.   ஆயினும்  ஸ்ரீ  ராமகிருஷ்ண  பரமஹம்சர்  தக்ஷிணேஸ்வரத்தில், அம்பாளின்  அர்ச்சகராக  இருந்து, அம்பாளாகவே  ஆனதால், எத்தனை  பக்தர்களை  அந்த ஆலயம் கவர்ந்து  இழுத்து ,உத்தம  கதியில்  செலுத்தியது!  அர்ச்சகருக்கு  பக்தி  இருந்தால், சேவார்த்திகளிடமும் அது  பாய்ந்து  பிரதிபலிக்கும்.  ரசிகர்கள்  தாமாகவே  பக்தியுடன் வந்தாலும் , பாடகர்  பக்தியில் ஊறினால், ஸதஸும்  ,பக்தியில் மேலும் ஈடுபடும். பாடுபவர்  மனம் பரமனிடம் ஒன்றினால் ,கேட்போர் மனமும் தானே ஒன்றும்.

     இது சங்கீதக் கலைஞர்களின் மஹத்தான பாக்கியம் .  உலக நடப்புகளில் அடிபட்ட எத்தனையோ  உள்ளங்களை  ஈஸ்வரனிடம் சேர்க்கும் பேறு  ,சங்கீதக் கலைஞருக்கே   உரியது.  இதை  நமது  பூஜ்ய  காமகோடி  பெரியவர்கள் பின்வருமாறு கூறி  அருளியிருக்கிறார் .
    "சங்கீதக் கலை என்பது கொஞ்சம் கூட கஷ்டம் இல்லாமல் மோக்ஷத்தையே வாங்கி கொடுக்கக் கூடியது.  வீணா வாத்தியம் ஒன்றை வைத்துக்கொண்டு  ஸ்வரசுத்தியோடு கலந்து வாசித்து  ஆனந்த மயமாக இருக்க கற்றுக்கொண்டால் , யோகம் பண்ண வேண்டாம், தபஸ் பண்ண வேண்டாம் ,சுலபமாக மோக்ஷத்தை அடைந்து விடலாம். ......அதோடு  யோகி  யோகம் செய்தால்,   தபஸ்வி    தவம்   செய்தால்,  அவர்களுக்கு  மட்டுமே  ஆத்மானந்தம் உண்டாகிறது.  சங்கீதம் ஒன்றில்தான் அதை அப்பியசிப்பவர்கள்  மட்டுமின்றி  கேட்கின்ற எல்லோருக்குமே  அதே   அளவு ஆத்மநாதம் உண்டாகிறது.   இது  நமது  பெரியவாள்  வாக்கு.

    சங்கீதத்தில்  இன்று  துரதிஷ்டவசமாக  தரம் குறைந்து  வருகிறது.  இதற்குப் பிரதானமான காரணம்  குருகுலவாசம் விடுபட்டுப் போனதுதான் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள் . மீண்டும் குருகுலவாச முறையை  முன்போல் ஏற்படுத்துவது  இயலாதிருக்கலாம் . எனினும்  அந்தப் பழைய  முறையின் மேன்மை  குறையாது. கோவிலுக்குப் போகிற பழக்கத்தை மக்கள் நிறுத்திவிட்டால் ,அதனால் தெய்வ வழிபாடு வேண்டியதில்லை  என்று  ஆகுமா?
 -------------









--------------------------


--



========================
தலைமை  உரை  முடிவுற்றது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
14-8-2019
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
1968ல்   சென்னை ம்யூசிக் அகடெமியில்  , அவரது  52 வயதில்      திருமதி. எம்.எஸ்.அவர்கள், சங்கீத  கலாநிதி  என்று  மிக  உயரிய விருதினை  அளிக்கப் பெற்றார்.
அந்த  ஆண்டு,    விழாவின்  முடிவுரையாக  , அவர்  நிகழ்த்திய  நன்றியுரை  இங்கு  தரப்பட்டுள்ளது.
------------------------------
மாண்புமிகு டாக்டர் கரண் சிங் அவர்களே, வித்வத்  சபை தலைவர் அவர்களே, வித்வான்களே விதூஷிகளே, சங்கீத மகனீயர்களே ரசிக பெருமக்களே,

விக்னம் ஏதும் இன்றி, இந்த 42-வது மகாநாடு நல்லபடியாக நடந்தேறியதற்காக முதலில் ஆண்டவனுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
தகுதிக்கு மீறிய பெரிய பொறுப்பை, பெரியோர்களின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஏற்றுக்கொண்டேன்.

வித்வத் சபையினரும், மற்ற நண்பர்களும், குறிப்பாக டாக்டர்  ராகவன் அவர்களும், எனக்குத்  துணை நின்று மகாநாட்டின் தலைமை பொறுப்பை நான்  நிறைவேற்ற பேருதவி செய்தனர். இவர்கள் யாவருக்கும்  எனது  இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சங்கீத மஹனியர்கள்  அனைவருக்கும் பிரதிநிதித்துவம் தாங்கும் மகோன்னதமான இசை நிறுவனம் நமது வித்வத்சபை. எனவே எனக்கு அளித்த சங்கீத கலாநிதி விருதை சங்கீத மஹனியர்கள் அனைவருமாக வழங்கின அருட்ப்ரசாதமாகக்  கருதி பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

டாக்டர்.கரண் சிங்க் அவர்கள் மிக நுட்பமான செவிப்புலன் வாய்ந்த ரசிக சிகாமணி. அவரே தலை சிறந்த வித்வானும் கூட. தேர்ந்த கல்விமான். பக்குவமான பக்திமான். இப்படிப்பட்டவர் இந்த சதசுக்கு தலைமை தாங்கி, என்னை பெருமைப்படுத்தியதில் நான் உள்ளம் நிறைவு கொள்கிறேன்.

திருவிதாங்கூர் மகாராணியார் விழாவை தொடக்கி வைத்ததும், காஷ்மீர் மகாராஜா இன்று சதசுக்கு தலைமை தாங்குவதும், எனக்கு பெருமை என்பதோடு மட்டுமின்றி, இந்த வித்வத் சபைக்கே பரம மங்களத்தை தந்திருக்கிறது. என்னுடைய தலைமை உரையில் வித்வத்சபைக்கு, நிதி நிலைமையில்  உள்ள சிரமத்தைப் பற்றி குறிப்பிட்டு அடுத்த ஓராண்டில்,  அதாவது பனிரெண்டு மாதங்களில் இந்த சிரமம் கணிசமாக குறையும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தேன்.ஒரு மஹாராணியும், ஒரு மஹாராஜாவும் இவ்வருட மகாநாட்டில் கலந்து கொண்ட முகூர்த்த விசேஷத்தில், இந்த பனிரெண்டு நாட்களிலேயே வித்வத் சபையின் பண சிரமம்  வெகுவாக குறைந்து விட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் . கலைகள் ரட்சிக்கவே கருணாமூர்த்தங்களாக  எழுந்தருளியுள்ள  தில்லை அம்பலமும், மதுரை மீனாட்சியும், காஞ்சி காமாட்சியும், பழனி ஆண்டவனும், வேங்கடேஸ்வர பெருமானும் கடைக்கண் பாவித்தால்  எந்த கஷ்டம் தான்  பஞ்சாய் பறக்காது? . இந்த மதிப்பிற்குரிய வித்வத்சபைக்கு இறைவன் நிச்சயம் துணைபுரிகிறான் என்ற நம்பிக்கை புரியப்பட்டுவிட்டது.

இனி வித்வத் சபை தன் சங்கீதப்  பணியை புதிய வேகத்துடன் ஆற்ற வேண்டும். முக்கியமாக, இளம் வித்வான்களை  தோற்றுவித்தும் , முன்னுக்கு கொண்டு வந்தும் , கர்நாடக சங்கீத வித்வ உலகின் எதிர்காலத்தை  வளப்படுத்த வேண்டும். அதோடு தரம் குன்றாத சங்கீதத்தை வளர்ப்பதே சங்கீத வித்வ சபையின் பணியாக ஆக வேண்டும் . இந்த நோக்கத்திற்காகவே முதுபெரும் வித்துவான் ப்ரம்மஸ்ரீ முடிகொண்டான் வெங்கட்ராம ஐயர் அவர்களும், அவர்களுடன் ஸ்ரீமுசிறி  அய்யர் அவர்களும், ஸ்ரீசெம்மங்குடி ஐயர் அவர்களும் போன்ற இன்னும் இரு மகா வித்வான்களும் வித்வ சபையின் சார்பில் ஒரு குழுவாக பேனல் அமைத்து சங்கீத யோக்கிதாம்சங்களை பெற்ற  இளம் பாடகர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது என் கருத்து . இப்படி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கென இந்த வித்வ சபையில் மாதம்  இரண்டு கச்சேரிகள் இதே அரங்கில் தர வேண்டும் என்ற யோசனையை (வடிவமைக்க வேண்டும்).

இந்த சங்கீத விதவை  சபை (பிரச்சனை)  இல்லாமல் சங்கீத சேவைக்கே இந்த சபை தன்னை அர்பணித்துக் கொள்ள முடியும். ஆனையை அர்ச்சக ஸ்தானத்தில் உள்ள வித்வ சபை நிர்வாகஸ்தர்கள் இந்த பரிசுத்தமான எதிர்காலத்தை உண்டாக்க வேண்டும் என்றுத்  தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். ஒழுக்கத்தின் உருவமாக விளங்கி மிகுந்த கண்டிப்புடன், இந்த வித்வ சபையை வளர்த்து, உருவாக்கிய சீமான் கே.வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்களுக்கு இதுவே நினைவஞ்சலியாக இருக்கும்.

தங்களின் பெரிய மனசின் விசேஷத்தால் என்னை பற்றி இங்கு பெருமையாக பேசிய பெரியோர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான  வந்தனம் தெரிவிக்கிறேன். இந்த ஆண்டு மகாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத்  தெரிவித்து கொள்கிறேன்.

இசை கச்சேரிகள்  நிகழ்த்திய மகா வித்வான்கள், விதூஷிகள், இளம் வித்வான்கள், விதூஷிகள் , பக்க வாத்திய கலைஞர்கள், குறிப்பாக வட இந்தியாவில் இருந்து வந்திருந்த வித்வான்கள், விதூஷிகள், நடன விதூஷிகள் அனைவருக்கும் என் நன்றி. ஆராய்ச்சி கட்டுரைகள் வழங்கியோர்க்கும், நிரூபணங்கள் தந்தோருக்கும் இவற்றுக்கு தலைமை தாங்கியவர்களுக்கும் எனது நன்றி. அமெரிக்கா முதலிய பிற நாடுகளில் இருந்து(ம்) இங்கு வந்திருந்து பனிரெண்டு நாட்களாக காலையில் இருந்து நள்ளிரவு வரை நிகழ்ச்சிகளில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கலந்து கொண்ட பெருமக்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

இசைப்  போட்டிகளுக்கு நீதிபதிகளாக அமைந்த பெரியோர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ஏனெனில்  இசையின் எதிர்காலத்துக்கு இவர்களல்லவா நம்பிக்கை ஊட்டுபவர்கள். ரசிக பெருமக்களுக்கு விசேஷமாக நன்றி சொல்ல வேண்டும். இந்த பனிரெண்டு நாட்களும் கல்யாண உற்சவமாக இங்கு கோலாகலத்துடன் மகாநாடு நிறைவேறியதற்கு அவர்களது உற்சாகமே காரணம்.

என்னை மேலும் மேலும் ஊக்கும் ரசிக பெருமக்களுக்கெல்லாம் என் உளம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன். என் தலைமை உரையில் நான் குறிப்பிட்டிருந்த பெரியோர்கள்  அனைவரது ஆசியையும் இன்று  மீண்டும் நினைவு கூறுகிறேன் . மகத்தான விருது எனக்கு கிட்டி இருக்கும் இன்று அமரர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களும், ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் அவர்களும் வானுலகில் பேரானந்தத்துடன் என்னை வாழ்த்தி கொண்டிருப்பார்கள். அவர்களை வணங்குகிறேன். எனக்கும் என் கணவருக்கும் பிதாவின் ஸ்தானத்தில் இருந்து அன்பறிய உதவிகளை புரிந்துள்ள, ஹிந்து பத்திரிக்கையின் அதிபர் காலம் சென்ற ஸ்ரீமான் கஸ்தூரி ஸ்ரீனிவாசன் அவர்களை, இன்று குறிப்பாக நினைவு கூர்ந்து நமஸ்கரிக்கிறேன். இந்த பனிரெண்டு நாட்களும், என்னை இயக்கிய அனுக்கிரக விசையாகிய  ஸ்ரீ காஞ்சி ஆச்சார்யாளின் அடிகளைப்  பணிகிறேன்.

குரு மூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி !








  


Popular posts from this blog

SEVAA SADHANAM - MSS FIIRST FILM 1938- SYNOPSIS IN THAMIZH

About SONGS IN MEERA 1945