'மீரா யாத்திரை '- அமரர் கல்கி மீரா படப்பிடிப்பு பற்றி 1944ல் எழுதிய கட்டுரை

'மீரா யாத்திரை '-  அமரர் கல்கி  மீரா படப்பிடிப்பு பற்றி  1944ல்  எழுதிய  கட்டுரை 
http://s-pasupathy.blogspot.in/2016/09/12.html
ராஜகுமாரி மீரா தன் குழந்தை உள்ளத்தைக் கொள்ளைகொண்ட மாயக் கண்ணனை மணக்க விரும்பினாள். அவளுடைய விருப்பத்துக்கு மாறாகச் சித்தூர் ராணாவுக்கு அவள் மாலையிட நேர்ந்தது.
ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்கு அத்தகைய நிர்ப்பந்தம் எதுவும் ஏற்படவில்லை. இரண்டு மூன்று கதைகளை அவருக்குச் சொல்லி, எந்தக் கதையில் நடிக்க இஷ்டம் என்று கேட்டபோது, மீராவாகத்தான் நடிப்பேன் என்று அவர்தம் விருப்பத்தைத் தெரிவித்தார். அதன் பயனாக மீரா அநுபவித்த கஷ்டங்களையெல்லாம் ஸ்ரீமதி எம்.எஸ்.ஸும் ஏறக்குறைய அநுபவிக்க வேண்டி நேர்ந்த போதிலும், அவற்றுக்கெல்லாம் அவருடைய சொந்த விருப்பமும் பிடிவாதமுமே காரணங்கள் ஆயின.
மீராவாக நடிப்பதென்றால், அது எளிதான காரியமா? மூர்மார்க்கெட்டைப் பிருந்தாவனமாகவும் கூவம் நதியை யமுனையாகவும் நினைத்துக் கொண்டு பக்திப் பரவசத்துடன் நடித்துவிட முடியுமா?
மாயக் கண்ணனைத் தேடி மீரா அலைந்த இடங்களுக்கெல்லாம் நானும் போவேன்; மீரா தரிசித்த திருக் கோயில்களையெல்லாம் நானும் தரிசிப்பேன். அப்போதுதான், உண்மையான மீரா இருதயத்துடன் என்னால் நடிக்க முடியும் என்று படத்தின் பிரதான நடிகை சொன்னால் அதற்கு மாறாக எப்படிப் படம் எடுப்பது சாத்தியமாகும் ?
இதற்கிடையில், டைரக்டர் எல்லிஸ் ஆர்.டங்கன், ஆயிரம் பக்கங்கள் அடங்கிய ’இராஜஸ்தான்என்னும் புத்தகத்தைக் கரதலப் பாடமாய்ப் படித்து, இராஜபுத்திரர்களின் வரலாறு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை - இராஜபுத்திர கன்னிகைகள் கல்யாணத்தின்போது கையில் என்ன வர்ணமுள்ள வளை அணிந்திருந்தார்கள் என்பது முதற்கொண்டு - தெரிந்து வைத்துக்கொண்டு, "கட்டாயம் வடநாட்டு யாத்திரை போகத்தான் வேண்டும்; இராஜபுத்திர நாட்டிலும், பிருந்தாவன துவாரகை க்ஷேத்திரங்களிலும் சரித்திர பூர்வமான தத்ரூபக் காட்சிகளை எடுத்து வர வேண்டும். இல்லாவிட்டால் படத்தில் உண்மை ஒளி வீசாது!" என்று தீர்மானமாகக் கூறினார்.

ஆகவே, நல்ல நாளில் மீரா யாத்திரை ஆரம்பமாயிற்று. ஸ்ரீ டி. சதாசிவம், ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, குழந்தை ராதா (பாலமீரா), டைரக்டர் டங்கன், காமராமேன் ஜிதேன் முதலிய சுமார் இருபது பேர் அடங்கிய கோஷ்டியார், யுத்த காலத்து ரயில் நெருக்கடியை இன்னும் அதிகமாக்கிக் கொண்டு, வடநாட்டுக்குக் கிளம்பினார்கள்.
நந்தகுமாரன் வளர்ந்து விந்தை பல புரிந்த பிருந்தாவனத்துக்கு முதன் முதலில் மீரா கோஷ்டி போய்ச் சேர்ந்தது. முதல் நாளன்று பிருந்தாவனத்தின் வீதிகளில் "பிருந்தாவனகி மங்கள லீலா” என்று ஆரம்பிக்கும் பிருந்தாவன கீதத்தைப் பாடிக்கொண்டு
ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பஜனை ஊர்வலம் வந்ததன் பயனாக, பிறகு  நாலு தினங்களிலும் பிருந்தாவனத்தின்  மூலை முடுக்கு, சந்து பொந்துகளில்  எல்லாம், "பிருந்தாவனகி மங்கள  லீலாஒலி செய்ய ஆரம்பித்தது. அந்தக் கீதம் அவ்வளவு தூரம் பிருந்தாவனவாசிகளின் மனத்தைக் வேண்டியிருந்தது. கவர்ந்துவிட்டது. மீரா இந்தத் துயர உலக வாழ்வை நீக்க விரும்பிப் புண்ணிய யமுனா நதியில் முழுகிய கட்டத்தைப் படம் பிடித்தபோது, கதாநாயகி உண்மையாகவே பெரும் சோதனைகளுக்கு ஆளாக வேண்டி யிருந்தது. அந்தக் காலத்தில் எப்படியோ தெரியாது. இந்தக் காலத்து யமுனை நதியில் பெரிய பெரிய ராட்சஸ ஆமைகள், மந்தை மந்தையாகக் குடி புகுந்திருக்கின்றன. அவற்றைக் கண்டாலே பயமாயிருக்கும். முதலையின் வாயிலிருந்து யானையைக் காத்த முராரியின் பேரில் பாரத்தைப் போட்டுவிட்டுத்தான் கதாநாயகி நதியில் இறங்க வேண்டியிருந்தது.
யமுனையில் மூழ்கிய மீராவை கிரிதர கோபாலன் படகோட்டி ரூபத்தில் வந்து காப்பாற்றுகிறான். இந்தக் காட்சியைப் படம் எடுத்த போது, காப்பாற்ற வந்த படகினாலேயே கதாநாயகிக்கு ஆபத்து வரப் பார்த்தது.
தண்ணிருக்குள்ளிருந்து மீரா மேலே வரும் சமயத்தில் படகு தலைக்கு நேராக வந்துவிடவே, தலை படகிலே மோதி, வெளியில் வர முடியாமல் மூச்சு முட்டி, சிறிது நேரம் திக்கு முக்காடும்படி ஆகிவிட்டது. அன்று மீராவைக் காப்பாற்றிய மாயக் கண்ணன்தான் தென்னாட்டின் புகழ் விளங்கச் செய்யும் பாடகியையும் இன்று காப்பாற்றினார் என்று சொல்ல வேண்டும்.பிருந்தாவனத்திலிருந்து மீரா கோஷ்டியார் ஜயப்பூர் சேர்ந்தார்கள். இராஜபுத்திர தேசத்தில் வீதி அழகுக்கும், வீடுகளின் அழகுக்கும் பெயர் போனது இந்தப் பட்டணம். இரத்தினக்கல் வர்ணம் கொண்ட சித்திர விசித்திரமான முகப்புகளை உடைய வீடுகளின் வரிசையைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த அழகிய பட்டணத்துக்கு, எட்டு மைல் தூரத்தில் 'புராணா காட்' என்று வழங்கும் இடத்தில் பழைய காலத்து வஸந்த மாளிகை ஒன்று இருக்கிறது. இந்த மாளிகை அமைந்துள்ள விஸ்தாரமான தோட்டத்தைச் சுற்றி, கண்ணுக்கெட்டிய தூரம் வரிசையாக அமைந்துள்ள மணி மண்டபங்களின் அழகை எளிதில் வர்ணிக்க முடியாது; வர்ணிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில், அந்த அற்புதக் காட்சியை நேயர்கள் மீரா படத்தில் நேரே பார்த்துக்கொள்ளலாம்.
அந்த மாளிகையைச் சேர்ந்த பூந்தோட்டத்திலே உலாவிக் கொண்டும், அங்குள்ள பளிங்கு நீர்த்தடாகத்தின் கரையில் உட்கார்ந்து கொண்டும், மீரா தன் குழந்தை உள்ளத்தைக் கவர்ந்து பரவசப்படுத்திய வேய்ங்குழலின் மோகன கீதத்தைப் பற்றிப் பாடுகிறார்.
இந்தக் காட்சி படம் எடுக்கப்பட்டபோது, ஜயப்பூரில் தற்சமயம் திவானாயுள்ள ஸர் மிர்ஸா இஸ்மேலின் மனைவியாரும், இன்னும் உயர் குலத்து இராஜபுத்திர மாதர் சிலரும் 'ஷூட்டிங் பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். ஒரு பகல் முழுதும் அவர்கள் அங்கேயே இருந்து, அவ்வப்போது மீராவின் கானத்தைக் கேட்டு ஆனந்தித்தார்கள். அந்த இராஜபுத்திரப் பெண்மணிகளிலே சிலர், மீராவுக்கு இராஜபுத்திர வழக்கப்படி உடை உடுத்துவதற்கும் ஆபரணம் அணிவதற்கும் ஒத்தாசை செய்தார்கள். மீரா படத்தை மதராஸி பாஷையில் ஏன் எடுக்கிறீர்கள்? ஹிந்தியில் எடுக்கக்கூடாதா?’ என்று கேட்காதவர்கள் இல்லை.
ஜயப்பூரிலிருந்து மீரா கோஷ்டியார் சரித்திரப் பிரசித்தி பெற்ற
 சித்தூருக்குச் சென்றார்கள்.

'பூதலம் உற்றிடும் வரையும் - அறப்

   போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்

மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்

    மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்!"
என்று பாரதியாரால் பாடப்பெற்ற இராஜபுத்திர வீரத்துக்கு மகத்தான ஞாபகச் சின்னமாக விளங்குவது சித்தூர்க் குன்றின் மேல் அமைந்த கோட்டையாகும். இந்தக் கோட்டை மூன்று தடவை முஸ்லிம்களின் பெருந்தாக்குதலுக்கு ஆளாகியது. ஒவ்வொரு தடவையும் அக்கோட்டையிலிருந்த வீர புருஷர்களும் தீர நாரீமணிகளும் இறுதிவரை போரிட்டு உயிரை விட்டார்களேயன்றி, ஒருவராவது எதிரிகளுக்குப் பணிந்து உயிரைக் காத்துக் கொள்ளவில்லை.
அந்தப் பெயர் பெற்ற சித்தூர்க் கோட்டையின் மதில்களும், அதன் ஏழு வாசல்களும், கோட்டைக்குள்ளேயிருந்த அரண்மனைகளும் அழகிய மாளிகைகளும் இன்று இடிந்து பாழாய்க் கிடக்கின்றன.
அந்தப் பாழுங்கட்டடங்களுக்கு மத்தியில் இன்றளவும் அழியாமல், அழகு குன்றாமல் விளங்கும் கட்டடம் ஒன்றே ஒன்று இருக்கிறது. அதுதான் தேவி மீராவுக்காகச் சித்தூர் ராணா கட்டிக் கொடுத்த கண்ணன் திருக் கோயில். அவர்களுடைய மணவாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், மீராவைப் பற்றி ராணாவின் மனம் கெடாமலிருந்த நாளில், மீரா கேட்டு ராணா கட்டிக் கொடுத்த கோயில்.
அந்த அழகிய கோயிலில் கிரிதாரியின் சந்நிதியில் அமர்ந்து, ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி மீராவின் கீதங்களைப் பாடியபோது, "இதே இடத்தில் தேவி மீரா அமர்ந்து இதே பாடல்களைப் பக்திப் பரவசமாய்ப் பாடியிருக்கலாமல்லவா?’ என்ற எண்ணமே எல்லோருடைய மனத்திலும் குடி கொண்டிருந்தது. எனவே, பாடும் போது, எம்.எஸ்.ஸும் கண்ணீர் விட்டுவிட்டார். மற்றவர்களின் கண்களிலும் நீர் துளித்தது. இதையெல்லாம்விட, அந்தக் கோயிலின் பூசாரி - கண் பார்வை மங்கிய கிழவர் - திடீரென்று ஆவேசம் வந்தவர்போல் கரதாளம் போட்டுக்கொண்டு மீரா கீதத்தை அநுபவிக்க ஆரம்பித்த காட்சி அபூர்வமாயிருந்தது.
சித்தூரிலிருந்து மீரா கோஷ்டியார் உதயபூருக்குச் சென்றார்கள். சித்தூர்க் கோட்டை மூன்றாவது தடவையும் எதிரிகளால் அழிக்கப் பட்ட பிறகு, மேவார் இராஜ வம்சத்தார் சித்தூரை விட்டுச் சென்று, எதிரிகள் அண்ட முடியாதபடி நாலுபறமும் மலை சூழ்ந்த இடத்தில் புதிய தலைநகரை ஸ்தாபித்துக் கொண்டனர். அந்தப் புதிய தலை நகரம்தான் உதயபூர். இன்றைக்குக்கூட உதயபூருக்குப் போவதற்கு மலைகளுக்கு நடுவே ஒரே ஒரு கணவாய் வழிதான் இருக்கிறது. அதன் மூலமாகவே வண்டிப் பாதையும் ரயில் பாதையும் போகின்றன. அந்தக் குறுகிய கணவாய்ப் பாதையில் இப்போதும் பிரம்மாண்டமான இரும்புக் கதவு போட்டிருக்கிறது. அஸ்தமித்ததும் அந்தக் கதவைப் பூட்டிவிடுகிறார்கள். பிறகு காலையில்தான் திறக்கிறார்கள். உதயபூருக்குப் போகிறவர்கள் எல்லோரும் பகலிலேதான் போய்த் தீர வேண்டும். இரவு வேளையில் நாட்டில் யாரும் அங்கே நுழைய முடியாது! ரயில் கூடத்தான்
இராஜபுத்திர நாட்டுக்குள்ளே மேவாருக்குத்தான் இன்றைக்கும் அதிக மதிப்பு. இறுதி வரையில், டில்லி பாதுஷாக்களுக்குப் பணியாமல்

எதிர்த்து நின்ற வம்சம் உதயபூர் வம்சம்தான். இந்தப் பரம்பரையான சுதந்திரப் போராட்டத்தில் மேவார் வம்சத்தினர் அநுபவித்த கஷ்டங்களுக்கு அளவேயில்லை. உலகத்தின் வீர சரித்திரத்திலேயே ஒப்பற்ற வீரச் செயல்கள் பல அவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். மற்றும் பல இராஜபுத்ர வம்சத்தினரைப் போல் டில்லி பாதுஷாக்களுக்கு இந்த வம்சத்தார் தங்கள் பெண்களைக் கல்யாணம் செய்து கொடுக்க வில்லை. இதனாலும் மற்றும் பல காரணங்களினாலும் உதயபூர் ராணா மட்டும்தான் இன்றைக்கும் இராஜபுத்திர நாட்டில் 'மகா ராணா' என்னும் பட்டத்துக்கு உரியவராய் விளங்குகிறார்.

தற்சமயம் இந்தியாவிலுள்ள சமஸ்தானங்களுக்குள் அந்தஸ்து மிகுந்தது உதயபூர் சமஸ்தானமேயாகும். இத்தகைய சமஸ்தானத்தின் பிரதம மந்திரி பதவியை, தற்சமயம் நமது தென்னிந்தியப் பிரமுகரான ஸர். டி.விஜயராகவாச்சாரியார் வகித்து வருகிறார்.
அந்தஸ்து மிகுந்த உதயபூரானது இந்தியாவிலேயே அழகிற் சிறந்த ஊர் என்று சொல்லலாம். உதயபூரில் உள்ள நீல நிற ஏரிகளைப்
போல் அழகான காட்சிகள் உலகிலேயே வேறெங்கேயாவது உண்டா என்பது சந்தேகம். ஏரிக்கரைகளி லும் ஏரியின் மத்தியிலும் உள்ள அரண்மனைகளின் அழகோ சொல்ல முடியாது.
இப்போதுள்ள உதயபூர் மகாராணா, பிராயத்திலும் அநுபவ ஞானத்திலும் மிகுந்தவர்; பிரஜைகளின் அபிமானத்தைக் கவர்ந்தவர். இந்தியாவிலேயே உயர்ந்த அந்தஸ்து வகிக்கும் சமஸ்தானத் தலைவராயிருந்தும், அவரிடம் ஆடம்பரமோ படாடோபமோ கிடையாது. எல்லோருடனும் சரளமாகப் பழகக் கூடியவர். உதயபூர் அரண்மனைகளுக்குள்ளே யார் வேண்டுமானாலும் சர்வ சாதாரணமாய் புகுந்து வேடிக்கை பார்க்கலாம். மகாராணா ஒரு அறையிலிருக்கும்போது, அதற்கு அடுத்த அறையில் ஜனங்கள் கூட்டங் கூட்டமாய் வந்து வேடிக்கை பார்த்துவிட்டுப் போவது சர்வ சாதாரணம்.
அழகிய உதயபூரின் நிர்மலமான நீல ஏரியில் மீராவும் ராணாவும் படகில் அமர்ந்து ஆனந்தமாகச் செல்லும் காட்சி இங்கே படம்
பிடிக்கப்பட்டது. உதயபூரில் உள்ள ஒரு சிங்கார வனத்தில், தாமரைத் தடாகம் ஒன்று இருக்கிறது. அதன் நாலு புறங்களிலும் நீர்ப்பொழிவுகள் முத்துச் சொரிவதுபோல் நீர்த் துளிகளைப் பொழிந்துகொண்டிருக்கும். இன்னும் அத்தடாகத்தின் நாலு மூலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள நாலு யானைகளின் தும்பிக்கை வழியாகத் தண்ணிர் சொரிந்து கொண்டிருப்பது ஒரு விந்தையான காட்சி. இந்தத் தாமரைக் குளைக் கரையிலே, நீர்ப் பொழிவுகளுக்கிடையிலே மீரா சிந்தனையிலாழ்ந்தவளாய் நடந்து செல்லும் காட்சி படம் எடுக்கப்பட்டது.
உதயபூரின் பிரசித்தி பெற்ற யானை ஊர்வலம் ஒன்றையும் மீராவுக்காகப் படம் எடுக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்கு மகாராணாவின் அநுமதி தேவையாயிருந்தது. அநுமதி கிடைக்குமோ, என்னமோ என்ற சந்தேகமும் இருந்தது.
தென்னாட்டின் பிரசித்தமான பாடகி "மீராபடம் சம்பந்தமாக உதயபூர் வந்திருக்கும் செய்தி அறிந்து, உதயபூர் உத்தியோக மண்டலத்தார் ஸர்.டி.விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் ஒரு சங்கீதக் கச்சேரி ஏற்படுத்தினார்கள். கச்சேரி முடிவில் ஸ்ரீமதி சுப்புலக்ஷமிக்கும் குழந்தை மீராவாக நடிக்கும் ராதாவுக்கும் மேற்படி உத்தியோக மண்டலத்தார் முத்து மாலைகள் பரிசளித்தார்கள். பின்னர், மகா ராணாவின் முன்னிலையிலும், ஸ்ரீமதி சுப்புலக்ஷ்மியின் கச்சேரி நடந்தது. எம்.எஸ்.ஸின் கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம் இரண்டையும் மகாராணா பெரிதும் பாராட்டியதுடன், மீரா கோஷ்டிக்கு வேண்டிய உதவியெல்லாம் அளிக்கும்படியும் உத்தரவிட்டார். அதன் பிறகு, உதயபூர் நீல நிற அரண்மனை யானைகளின் ஊர்வலம்'மீரா' படத்துக்காக எடுக்கப்பட்டது.
உதயபூரிலிருந்து மீரா கோஷ்டியார், பிரசித்த சித்திரக்காரரும் 'மீரா'வின் காட்சிகள் ஆர்ட் டைரக்டருமான ஸ்ரீ கனுதேசாயின் அழைப்பின் பேரில் ஆமதாபாத்துக்குச் சென்றார்கள். அங்கே தென்னிந்தியர்களும் குஜராத்திகளும் ஆயிரக்கணக்காகக் கூடியிருந்த சபையில் ஸ்ரீமதி சுப்புலக்ஷ்மியின் சங்கீதக் கச்சேரி நடந்தது. கர்நாடகப் பாட்டும், ஹிந்துஸ்தானி பாட்டுமாக மாற்றி மாற்றி எம்.எஸ். பாடிச் சபையோரைக் களிப்பித்தார். நாலு மணி நேரம் சேர்ந்தாற்போல் சங்கீதம் கேட்பதென்பதையே அறிந்திராத குஜராத்திகள் எம்.எஸ்.ஸின் இன்னிசையைக் கேட்டுப் பிரமித்துப் போனார்கள். ஆமதாபாத்தின் மிகச் செல்வாக்குள்ள குடும்பங்களில் எல்லாம் 'மீரா'வுக்கு அழைப் பின் மேல் அழைப்பாக வந்தது!
தேவி மீரா தன் உள்ளங்கவர்ந்த கள்வனை நாடெல்லாம் தேடி அலைந்து, பிறகு கடைசியாக துவாரகைக்கு வந்து, கண்ணனுடைய பூரண அருளைப் பெற்று அவனுடைய பாதக் கமலங்களில் ஐக்கியமாகிறாள். மீரா கோஷ்டியின் யாத்திரையும் துவாரகையிலேதான் முடிவடைந்தது. துவாரகையின் வீதிகளில் 'மீரா', கண்ணன் திருநாமத்தைப் பாடிக்கொண்டு சென்றபோது, பிருந்தாவனத்திலே கண்ட காட்சிகள் இங்கு இன்னும் அதிகமாய்த் தென்பட்டன. ஜனங்கள் திரள் திரளாகக் கூடி மீராவைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அநேகம் பேர் உண்மையாகவே மீரா புனர் ஜென்மம் எடுத்து வந்துவிட்டதாக எண்ணி, மீராவுக்குரிய வழிபாடுகளைச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்! அப்படிச் செய்ய வேண்டாமென்று அவர்களைத் தடை செய்வது பிரம்மப் பிரயத்தனமாகிவிட்டது. துவாரகையின் கோயில் படிகளின் மீது மீரா ஏறி, கண்ணன் சந்நிதியில் கதறிக்கொண்டு நுழைந்து, உணர்வற்று விழுகிற காட்சியில், ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி உண்மையாகவே உணர்விழந்து விழுந்து விட்டார்.
'மீரா' படத்தில் மேற்படி துவாரகைக் கோயில் சம்பவம், பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும் சிகரமான காட்சியாயிருக்குமென்று எதிர்பார்க்கப் படுகிறது.

[ நன்றி: கல்கி தீபாவளி மலர் (1944) ; கல்கி பொன்விழா மலர் (1992) ]

Popular posts from this blog

Smt.MS. 1968- MUSIC ACADEMY- -presidential address and thanks-giving speech

SEVAA SADHANAM - MSS FIIRST FILM 1938- SYNOPSIS IN THAMIZH

About SONGS IN MEERA 1945